Tamil Seithi Sevai
  Home    About Us    Contact Us
Login    |   Subscribe

நகைக்கடையில் ரூ.2 கோடி கொள்ளை

சென்னை | Mon, 08 Feb 2010 04:53 PM IST

சென்னை, பிப்.8 (டிஎன்எஸ்) பூந்தமல்லி அருகே அடகு கடையின் சுவரில் துளை போட்டு 2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள் மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளை  அடித்துச் சென்றுள்ளனர். மர்ம ஆசாமிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

பூந்தமல்லி அருகே கரையான் சாவடி ஆவடி ரோடு பிரியும் பகுதியில் விக்னேஷ் ஜூவல்லர்ஸ் எனும் நகைக் கடை உள்ளது. இந்த நகைக்கடையை வட இந்தியரான பர்சந்த் ஜெயின் (வயது 50) என்பவர் கடந்த 13 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். அவருடன், அவருடைய  மகன் தினேஷ்குமாரும் (வயது 23) கடையை நடத்தி வந்தனர்.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை விற்பனைக்காக அந்த கடையில் பர்சன்சந்த் வைத்திருந்தார். இது தவிர அந்த பகுதி மக்களிடம் தங்க நகைகளை அடகாக வாங்கிக் கொண்டு பணம் கொடுக்கும் தொழிலையும் செய்து வந்தார்.

நேற்றிரவு 9.30 மணியளவில் கடையை பூட்டிவிட்டு இருவரும் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர். இன்று காலை 8.45 மணிக்கு தினேஷ்குமார் கடையை திறந்தார். முதலில் கிரில்கேட்டும், அதனை தொடர்ந்து இரும்பு ஷட்டரும், மூன்றாவதாக மரக்கதவும் உள்ளது. ஒவ்வொரு கதவாக திறந்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. இரும்பு பெட்டகம் திறந்து கிடந்தது. பொருட்கள் அலங்கோலமாக இருந்தன. கடையின் பக்கத்து சுவரில் துளை போட்டு மர்ம ஆசாமிகள் நுழைந்து நகைகளை சூறையாடி சென்றது தெரியவந்தது. உடனடியாக தந்தைக்கு அவர் தகவல் கொடுத்தார்.

காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் ஜூட் துரைபாண்டி, இன்ஸ்பெக்டர் அருள்சந்தோஷமுத்து ஆகியோர் விரைந்து வந்தனர். நகைக்கடையின் பின் பக்க சுவரை மர்ம மனிதர்கள் கடப்பாரையால் இடித்து துளை ஏற்படுத்தியிருக்கிறார்கள். மரக்கடைக்குள் உட்கார்ந்து கொண்டால் வெளியில் தெரியாது என்பதால், அது மர்ம மனிதர்களுக்கு மிகவும் வசதியாக போய் விட்டது. சுமார் 3 அடி அகலத்துக்கு ஓட்டைப்போட்டுள்ளனர்.

எட்டரை கிலோ தங்கம், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அடகு நகைகள், 30 கிலோ வெள்ளி மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளை போயுள்ளது. மொத்தம் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் சூறையாடி சென்றுள்ளனர்.

எழும்பூரிலிருந்து தண்டர் என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கடையிலிருந்து மோப்பம் பிடித்தபடி கரையான்சாவடி பேருந்து நிலையம் வரை அந்த நாய் ஓடிச் சென்று பின்னர் நின்றுவிட்டது. மர்ம ஆசாமிகள் அங்கிருந்து வாகனம் மூலம் தப்பிச் சென்றிருக்கக் கூடும் என சந்தேகிக் கப்படுகிறது. கடையில் பதிவான ரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்தனர்.

கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 
சென்னையில் சமீப நாட்களில் நடந்துள்ள கொள்ளைச் சம்பவங்களில் இது தான் மிகப் பெரிய சம்பவமாகும். கொள்ளையர்களைப் பிடிக்க தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)
 

Home  |  About Us  |  Contact Us  |  Subscribe