
சிறப்பு கட்டுரை
" ஊழலே உன்னை ஆராதிக்கிறேன்!"
(முன் ஜாக்கிரதைக் குறிப்பு: தலைப்பை கவனியுங்கள். மேற்கோள் குறியை கவனியுங்கள். ஆக இந்த கோஷம் என்னுடையதல்ல.)
ஊழலை ஒழிக்கவேண்டும் என்றும் அந்த பூதம் எப்போது ஒழியுமோ என்றும் ஊருக்கு நாலு பேர் உரத்துப் பேசுவதைக் காலங் காலமாகக் கேட்டு வருகிறோம்.'அது என்ன , இத்தனைப் பேர் ஏதேதோ முயன்றும் இந்த ஊழல் பூதம் ஒழிய மாட்டேன் என்கிறதே!' என்று நம்மில் பலர் அதிர்ச்சியும் சிலர் ஆச்சரியமும் அடைகிறோம் அல்லவா? "இதில் அதிர்ச்சியும் ஆச்சரியமும் பட என்ன இருக்கிறது.? ஊழல் நமது தேசிய ஒழுக்கமாகி எத்தனையோ நாட்களாயிற்றே.ஒழிப்பதா, ஒழிக்காமல் விடுவதா? என்ற 'ஹாம்லடின் சந்தேக'த்துக்கே இடமில்லை" என்று ஒரு குரல் கேட்கிறது. அந்த அசரீரி அனுபவஸ்தரின் விளக்கத்தைக் கேட்டுவிடுவோம்!
"முதலில் ,ஊழல் என்பது ஒரு பூதம் அல்ல, சிலருக்கு அது ஒரு தெய்வம். பிரும்மாண்டமாகக் கோவில் கட்டி,பெரிய சிலை வைத்து, பூசையெல்லாம் செய்ய வேண்டிய தெய்வம். சொல்லப்போனால கோவில் இருக்கிறது. சில அரசியல் வாதிகளும், சில வணிகர்களும், சில அதிகாரிகளுமாகச் சேர்ந்து மானசீகமாகக் கோவில் கட்டி இருக்கிறார்கள். பூசைகளும் படையல்களும் விமரிசையாக நடைபெறுகின்றன. திருவிழாவும் உண்டு.நேர்மையானவர்கள் கண்ணுக்குத் தெரியாது.
"ஊழல் தெய்வம் அதன் பக்தகோடிகளுக்கு எப்படியெல்லாம் அருள் பாலிக்கின்றது தெரியுமா? பக்தனுக்கு ஏற்ப , பூசை, படையலுக்கேற்ப அருளின் தரம் இருக்கும். ஒரு உதாரணம் சொல்லுகிறேன்.
"ஓர் ஊரில் ஓர் அரசர் இருந்தார். நல்ல ஆட்சி .ஆனால் அவரது அமைச்சரைப் பற்றி அவ்வப்போது அரசால் புரசலாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் அவர் காதில் விழுந்தன. எந்த அரசாங்கக் காரியமானாலும் அவருக்கு 'வெட்டு 'உண்டு என்றார்கள். ஊரெல்லாம், நாடெல்லாம் நிலம் வாங்கி குவித்து வருகிறார் என்றார்கள். அவரிடம் தனிக் கருவூலமே இருக்கிறது என்றார்கள். இந்தக் குரல் மெல்ல வலுவடைந்து அரண்மனைப் பக்கம் நகர்ந்து, அரசவையின் அத்தாணி மண்டபத்தையே அடைந்தது ஒரு நாள். அரசர் இனியும் தாமதிப்பது தமக்கே தீங்கு என உணர்ந்து 'விசாரணைக் கமிஷன்'போட்டார்.
'கமிஷ'னின் தீர்ப்பு அமைச்சருக்கு எதிராக அமைந்தது. கடும் சிறை வாசமே தண்டனை என்றாயிற்று. அரசர் பார்த்தார். அந்த அமைச்சர் பரம்பரை, பரம்பரையாக அமைச்சுப் பணியில் இருப்பவர். ஆகவே, அவருக்கு என்ன தண்டனை கொடுப்பது என்று யோசித்தார். 'பளிச்'சென்று ஒரு கருத்து மின்னலிட்டது . அரசவையைக் கூட்டினார். தண்டனையை அறிவித்தார். தண்டனையின்படி மறுநாளே அமைச்சர் இரு உதவியாளர்களுடன் கடற்கரைக்குச் சென்று கூடாரம் அமைத்துக் கொண்டு, கடல் அலைகளைக் கணக்கிட்டு நாள் தோறும் கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்பது ஆணை.
"கடல் அலைகளைக் கணக்கிடுவதா. மாட்டிக்கொண்டார் அமைச்சர். என்று அனைவரும் மகிழ்ந்தனர்.
"அவையே திடுக்கிடும் வகையில் அமைச்சர் உடனே ஒப்புக்கொண்டார். சொன்னபடி மறு நாள் முதல் தனது பணியை நிறைவேற்றத் தொடங்கினார்.
சில நாட்கள் ஆயின. கணக்கு வந்த வண்ணம் இருந்தது. அரசருக்கு சரிவர ஆராயாமல் தண்டனை தந்துவிட்டோ மோ என்ற கவலை சூழ்ந்தது. அதே நேரத்தில் 'கிசு கிசு' எந்திரம் 'க்றீ' ச்சிடத் தொடங்கியது. அமைச்சர் முன்பு இருந்ததை விட அதிகமாக லஞ்சம் வாங்குகிறார் என்று வதந்தி பரவியது. உளவுத் துறையைக் கேட்டார். தயக்கத்துடன் 'ஆமாம் 'என்றார்கள். அரசர் யோசித்தார். மாறு வேடம் புனைந்து நேரில் பார்த்து விடுவது என்று முடிவு செய்தார்.
"மறுநாள் காலையில் மாறுவேடம் பூண்ட அரசர் கடற்கரை சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி அவரை திடுக்கிட வைத்தது.
(தொடரும். ஆனால்,கதையல்ல நிஜம்!)
---விஜய திருவேங்கடம் ----