Tamil Seithi Sevai
  Home    About Us    Contact Us
Login    |   Subscribe

நேரு குடும்பத்திலிருந்து முதன் முறையாக...

சென்னை | Sat, 13 Mar 2010 09:45 AM IST

சென்னை, மார்ச்.12 (டிஎன்எஸ்) சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவன் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு முதன்முறையாக நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் வருகிறார், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி.

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பொறுப்புகளை நேரு குடும்பத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து வகித்து வருகின்றனர். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, அவரது மனைவி சோனியா காந்தி என தொடர்ச்சியாக தலைவர் பொறுப்புகளை வகித்து வந்தனர்; வகித்தும் வருகின்றனர்.

சென்னை அண்ணா சாலைக்கு அருகே அமைந்துள்ளது சத்தியமூர்த்தி பவன் என்று அழைக்கப்படும் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகம். 1956ஆம் ஆண்டு சத்தியமூர்த்தியின் பெயரால் திறக்கப்பட்டது. அன்று முதல், கட்சியின் அகில இந்தியத் தலைவராக பொறுப்பு வகித்த யாரும் பவனுக்கு வந்தது கிடையாது.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களும் கூட சத்தியமூர்த்தி பவனுக்கு அதிகம் வருவதில்லை.

பின்னர் சோனியா காந்தி காங்கிரஸ் தலைவரான பின்னரும் கூட அவரும் பலமுறை தமிழகம் வந்துள்ளார். ஆனால் ஒரு முறை கூட சத்தியமூர்த்தி பவன் பக்கம் எட்டிப் பார்த்ததில்லை.

இதை விடக் கொடுமை,சத்தியமூர்த்தி பவன், 1956ம் ஆண்டு திறக்கப்பட்டது. அன்று முதல், கட்சியின் அகில இந்தியத் தலைவராக பொறுப்பு வகித்த யாருமே இங்கு வந்ததே இல்லை என்பதுதான் அது.

மேலிடப் பார்வையாளர் அல்லது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என யாரேனும் தில்லியில் இருந்து வந்தால் மட்டும் கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள், மாநிலத் தலைவர்களின் கூட்டம் அலைமோதும். ஓரிரு மணி நேரத்தில் அந்தக் கூட்டம் கலைந்து விடும்'' என்கிறார் சத்தியமூர்த்தி பவனின் மூத்த நிர்வாகி ஒருவர்.

இந்த நிலையை அண்மையில் சென்னைக்கு ராகுல் காந்தி வந்தபோது லேசாக துடைத்தார். சென்னைக்கு வந்த அவர் நேராக சத்தியமூர்த்தி பவனுக்குத்தான் போனார். அங்கு அமர்ந்து காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதாவது சத்தியமூர்த்தி பவனை ஒரு கட்சித் தலைமையகமாக மதித்தவர் அவர் மட்டுமே.

அத்தோடு நில்லாமல், கட்சித் தலைவர்கள் அனைவரும் கட்சியின் தலைமை அலுவலகத்துக்குக் கட்டாயம் வர வேண்டும் என்றும் குட்டு குட்டினார் ராகுல். அவர் சொன்ன பிறகே மூத்த தலைவர்கள் சிலர் அவ்வப்போது இங்கு வந்து உட்கார்ந்து விட்டுச் செல்ல ஆரம்பித்தனர்.

அவரது இந்தக் கருத்தைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு தலைவர்களும் சத்தியமூர்த்தி பவனுக்கு அடிக்கடி வரத் தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில், தமிழக சட்டப் பேரவை மற்றும் தலைமைச் செயலகத் திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் சனிக்கிழமை சென்னை வருகின்றனர்.

விழாவினை முடித்து விட்டு, அவர்கள் இருவரும் சத்தியமூர்த்தி பவனுக்குச் செல்கின்றனர். இந்த வருகையால் நேரு குடும்பத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் பவனுக்குச் செல்லும் முதல் தலைவர் என்ற பெருமையை சோனியா காந்தி பெறுகிறார்.

இரண்டு தலைவர்களின் வருகையால் தமிழக காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டுள்ளது. (டிஎன்எஸ்)

Home  |  About Us  |  Contact Us  |  Subscribe