ஸ்ரீநகர், பின்.8 (டிஎன்எஸ்) காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் இன்று (பிப்.8) பனிப்புயல் தாக்கியது. இந்த புயலில் சிக்கி 6 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் பல ராணுவ வீரர்கள் உள்பட 450 பேர் சிக்கிக்கொண்டனர்.
இதுவரை 70 பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ளவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை. இதில் பலர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த விபரீதம் நடந்தது. பாரமுல்லா மாவட்டத்தின் குல்மார்க் பகுதியில், ராணுவத்தினருக்கான நல முகாம் உள்ளது.
இன்று முற்பகல் 11 மணியளவில் அருகில் உள்ள கிலன்மார்க் மலைப் பகுதியில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. ராட்சத பனிக்கட்டிகள் சரிந்து முகாம் மீது விழுந்தன. இதில் முகாமில் இருந்த 400க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. 70 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட ராணுவ முகாமில் 300 ராணுவ பயிற்சி வீரர்கள், 100 பயிற்சியாளர்கள், 60 ஊழியர்கள் இருந்தனர். மேலும் பொதுமக்கள் தரப்பில் 50 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது.
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. (டிஎன்எஸ்)