சிதம்பரம், மார்ச்13 (டிஎன்எஸ்) என்எல்சி வளாகத்தில் கொள்ளையடிக்க முயன்ற 30 பேர் கொண்ட கும்பலை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு விரட்டியுள்ளார்.
மத்திய அரசின் நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் என்எல்சியில் முதல் சுரங்க வளாகத்தில் சுரங்க பணிகளுக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர்தரமான செப்பு கம்பிகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த காவலர் தேவதாஸ் இந்த வளாகத்தில் நேற்றிரவு காவல் காத்து வந்தார். அதிக விலைமதிப்பிலான இந்த செப்பு கம்பிகளை திருட 30 பேர் கொண்ட கும்பல் திமு திமுவென வளாகத்தில் புகுந்தது. அந்த கும்பல் அங்கே குவித்து வைக்கப்பட்டிருந்த செப்பு கம்பிகளை திருட முயன்றது. இதனை காவலர் தேவதாஸ் தடுக்க முயன்றார்.
அப்போது அந்த கும்பல் தேவதாசை அரிவாளால் வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவலர் தேவதாஸ் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் 3 முறை வானத்தை நோக்கி சுட்டார். இதனால் அச்சம் அடைந்த அந்த கும்பல் அங்கிருந்து சிதறி இருளில் ஓடி மறைந்தது.
இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து 30 பேர் கொண்ட மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகிறது.பாதுகாப்பு மிகுந்த என்எல்சி வளாகத்தில் நடந்த இந்த கொள்ளை முயற்சி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (டிஎன்எஸ்)