விழுப்புரம், பிப்.6 (டிஎன்எஸ்) மரக்காணம் அருகே கல்லூரி மாணவன் ஒருவர் ராகிங் கொடுமை தாங்காமல் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த அனுமந்தையை சேர்ந்த குப்புசாமியின் மகன் ஸ்ரீதர் (வயது 20). பொம்மையார் பாளையத்தில் உள்ள சித்தர் சிவஞானி ஆண்கள் கலைக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார்.
இவரை இக்கல்லூரியில் படிக்கும் மூத்த மாணவர்கள் கேலியும் கிண்டலும் செய்துள்ளனர். இது குறித்து மாணவன் ஸ்ரீதர் அவரது தந்தையிடம் தெரிவித்துள்ளான். தந்தை குப்புசாமி கல்லூரி பிரின்சிபாலிடம் புகார் தெரிவித்தார்.
மாணவர் ராக்கிங் செய்யப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. நேற்று வழக்கம்போல் ஸ்ரீதர் கல்லூரிக்கு சென்றார். மதியம் 11 மணி அளவில் வீடு திரும்பிவிட்டார். அப்போது சோகமாக காணப்பட்டார்.
ஸ்ரீதர் வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உயிருக்கு போராடிய நிலையில் புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆரோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரிக்கு சென்ற ஸ்ரீதரை ஏற்கனவே ராக்கிங் செய்த மாணவர்கள் மீண்டும் ராக்கிங் செய்ததை அடுத்து ஸ்ரீதர் தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. மரக்காணம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். (டிஎன்எஸ்)