பண்ருட்டி, பிப்.8 (டிஎன்எஸ்) சென்னைநோக்கி கும்பகோணத்திலிருந்து வந்து கொண்டிருந்த தமிழக அரசு விரைவு பேருந்தும், சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு பயணிகளை ஏற்றி வந்த தனியார் பருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் பயணிகள் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு 11 மணிக்கு கும்பகோணத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தமிழக அரசு விரைவு பேருந்து சென்னைக்கு புறப்பட்டது. கும்பகோணத்தை சேர்ந்த ஓட்டுநர் பாலசுப்பிரமணியன் (வயது 57) இந்த பேருந்தை ஓட்டி வந்தார். நள்ளிரவு 2.15 மணியளவில் பண்ருட்டி அருகே சூரக்குப்பம் அண்ணாநகர் மெயின் ரோட்டில் அந்த பேருந்து வந்து கொண்டிருந்தது. அப்போது, சென்னையில் இருந்து மன்னார்குடிக்கு பயணிகளை ஏற்றி வந்த தனியார் டிராவல்ஸ் பேருந்தும், அரசு விரைவு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் 2 பேருந்துகளின் முன்பக்கமும் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் இரண்டு பேருந்துகளின் ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர்.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்னகுமார். இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு வண்டிகள், 10 அம்புலன்ஸ் வண்டிகள் வரவழைக்கப்பட்டன. பலியான டிரைவர்கள் உடல்கள் மீட்கப்பட்டது.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பொக்லின் எந்திரத்தை வர வழைத்து விபத்துக்குள்ளான 2 பஸ்களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.
மேலும் இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். (டிஎன்எஸ்)