Tamil Seithi Sevai
  Home    About Us    Contact Us
Login    |   Subscribe

வைகோ செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்

சென்னை | Mon, 08 Feb 2010 05:06 PM IST

சென்னை, பிப்.8 (டிஎன்எஸ்) மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு இன்று (பிப்.8) சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள 3ஆவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வைகோ நேரில் ஆஜரானார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி விசாரணையை அடுத்த மாதம் 29ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
 
பின்னர் வெளியே வந்த வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
 
தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. கேரள அரசு முல்லை பெரியாறில் பழைய அணையை உடைப்பதற்காகத்தான் புதிய அணை கட்ட முயற்சிக்கிறது. அங்கு பள்ளத்தில் அணை கட்ட இருப்பதால் கேரளாவே நினைத்தாலும் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது.
 
முல்லைப் பெரியாறு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியிடம் தமிழக அரசு வக்கீல் பராசரன் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. மாறாக ஒப்புதல் தெரிவித்தார். அதன்பிறகுதான் அடுத்த விசாரணையில் எதிர்ப்பு தெரிவித்தார்.
 
பராசரன் மீது எனக்கு எந்த தனிப்பட்ட வெறுப்பும் கிடையாது. தமிழக முதல்வரின் எண்ணத்தைத்தான் அவர் பிரதிபலித்துள்ளார். எனவே முல்லை பெரியாறு பழைய அணையை காப்பாற்ற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார். (டிஎன்எஸ்)

Home  |  About Us  |  Contact Us  |  Subscribe