சேலம், பிப்.6 (டிஎன்எஸ்) சேலம்-சென்னை விமான கட்டணம் பிப்.15ஆம் தேதி முதல் மூன்று மாத காலத்துக்கு ஒரே கட்டணமாக 1,999 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதால், சேலம் மாவட்ட தொழிலதிபர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிங் பிஷர் நிறுவனம் மூலம், கடந்த நவ., 15ஆம் தேதி சேலம்-சென்னை விமான சேவை துவங்கப் பட்டது. தினசரி மதியம் 2.50 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, 3.50க்கு விமானம், சேலம் சென்றடைகிறது. மீண்டும், மாலை 4.20க்கு புறப்பட்டு மாலை 5.20க்கு சென்னை வந்தடைகிறது. 72 பேர் கொண்ட விமானம், இப்பயணத்துக்கு பயன்படுத்தப்படுகிறது.
துவக்கத்தில், சேலத்திலிருந்து சென்னைக்கு, 2,877 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. பின், பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, விமான கட்டணத்தை படிப்படியாக கிங் பிஷர் நிறுவனம் குறைத்து வந்தது. தற்போது, 2,029 முதல் 7,129 ரூபாய் வரை விமான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், பிப்.15 முதல் மே 14ஆம் தேதி வரை, அனைத்து பயணிகளுக்கும் ஒரே கட்டணமாக 1,999 ரூபாயாக நிர்ணயித்து புது சலுகையை கிங் பிஷர் நிறுவனம் அறிவித்துள்ளது. (டிஎன்எஸ்)