Tamil Seithi Sevai
  Home    About Us    Contact Us
Login    |   Subscribe

தேர்தல் அதிகாரியிடம் பாமக புகார்

சென்னை | Wed, 10 Mar 2010 12:04 PM IST

சென்னை, மார்ச்.10 (டிஎன்எஸ்) பென்னாகரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய துணை ராணுவத்தை பயன்படுத்தவேண்டும், தேர்தல் பணிகளில் மத்திய அரசு ஊழியர்களை ஈடுபடுத்தவேண்டும் என்று பாமக சார்பில் நரேஷ் குப்தாவிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாமக சட்டமன்றக் கட்சிக் கொறடாவும், பென்னாகரம் தொகுதி பாமக தேர்தல் பணிக்குழு தலைவருமான வேல் முருகன் இன்று (மார்ச்.10) சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், பென்னாகரம் தொகுதியில் ஆளும் கட்சியினர் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் துணையுடன் அராஜகத்தில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தேர்தல் அதிகாரியிடம் தாம் கோரிக்கை மனு அளித்திருப்பதாக அவர் கூறினார்.

பாமக--வினர் மீது தாக்குதல் நடைபெறுவதாகவும், அதை தடுத்து நிறுத்த்வேண்டும் என்று தாம் தெரிவித்ததாகவும் கூறிய அவர், இது தொடர்பான புகைப்பட மற்றும் வீடீயோ ஆதாரங்களை அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பென்னாகரம் இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதற்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வேல் முருகன் குறிப்பிட்டார்.  (டிஎன்எஸ்)

Home  |  About Us  |  Contact Us  |  Subscribe