லாகூர், மார்ச்.10 (டிஎன்எஸ்) பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான யூனிஸ்கான், முகம்மது யூசுப் ஆகியோருக்கு ஆயுள் கால தடையை விதித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதேபோல சோயப் மாலிக், ராணா நவேத் ஆகியோருக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இதில் டெஸ்ட், ஒரு நாள் போட்டி, 20 ஓவர் போட்டி அனைத்திலும் பாகிஸ்தான் படுதோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணி வீரர்கள் சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், வேண்டும் என்றே மோசமாக விளையாடியதால் தான் இந்த தோல்வி ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது.
மேலும் கமரன் அக்மல், அவரது சகோதரர் உமர் அக்மல் அணி நிர்வாகத்துடன் மோதினார்கள். அப்ரிடி, ரானா ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதாகவும் புகார் கூறப்பட்டது.
இந்த விவகாரங்கள் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் விசாரணை நடத்தியது. விசாரணையில் சில வீரர்கள் தவறு செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு தண்டனை வழங்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை இன்று (மார்ச்.10) வெளியிட்டனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சட்ட ஆலோசகர் தபசூல் ரிஸ்வி கூறுகையில், யூனிஸ் கானும், யூசுப்பும் இனிமேல் பாகிஸ்தான் அணிக்காக எந்த சர்வதேச போட்டியிலும் விளையாட முடியாது. அதேசமயம், கவுன்டி கிரிக்கெட் போட்டிகள், உள்ளூர் போட்டிகளில் அவர்கள் விளையாடலாம்.
மாலிக், நவேத் ஆகியோருக்கு ஒரு ஆண்டு தடை தவிர தலா 20 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மலுக்கு 30 லட்சம் ரூபாய் அபராதமும், அவரது தம்பி உமர் அக்மலுக்கு 20 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில், பந்தைக் கடித்து சேதப்படுத்தியதற்காக ஷாஹித் அப்ரிதிக்கு 30 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அப்ரிதியும், அக்மல் சகோதரர்களும் ஆறு மாத காலம் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். அப்போது அவர்களது நடத்தை தீவிரமாக கண்காணிக்கப்படும் என்றார் ரிஸ்வி.
20 ஓவர் உலககோப்பை அணியும் இன்று அறிவிக்கப்பட்டது. அதில் சோயிப் மாலிக், ரானா நவீத் உல்ஹசன், யூனுஸ்கான், முகமது யூசுப் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. (டிஎன்எஸ்)