Tamil Seithi Sevai
  Home    About Us    Contact Us
Login    |   Subscribe

ஐக்கிய ஜனதா தளம் பிளவு: நிதிஷ்குமார் புதுகட்சி தொடங்குகிறார்

தேசியம் | Wed, 10 Mar 2010 12:17 PM IST

புதுடெல்லிஸமார்ச்.10 (டிஎன்எஸ்) பீகார் மாநிலத்தின் ஆளும் கட்சியாக ஐக்கிய ஜனதா தளம் இருந்து வருகிறது.  இந்த கட்சியின் தலைவர் சரத்யாதவ். ஆனால் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி செய்யும் பீகாரில் முதலமைச்சராக இருப்பவர் நிதிஷ்குமார்.
 
சரத்யாதவ், நிதிஷ்குமார் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்து வருகிறது. இதனால் இரண்டு பேரும் அடிக்கடி மோதும் நிலை உள்ளது.
 
இந்த நிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா இரண்டு தலைவர்களுக்கும் இடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்தி உள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை ஐக்கிய ஜனதா தளம் எதிர்க்கும் என்று சரத்யாதவ் கூறி இருந்தார்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவால் தற்போது ஐக்கிய ஜனதாதளத்தில் பிளவு ஏற்பட்டு விட்டது. இந்த மசோதாவுக்கு கட்சியின் மூத்த தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ் குமார் ஆதரவாக இருந்தார். ஆனால் சரத் யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார்.

தனது கட்சி எம்.பிக்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது என்று சரத் யாதவ் உத்தரவிட்டிருந்தார்.

இருப்பினும் அதை மீறி நேற்று ராஜ்யசபாவில் நடந்த வாக்கெடுப்பின்போது, ஐக்கிய ஜனதாதளத்தின் சிவானந்த திவாரி, என்.கே.சிங், அலி அன்வர், மகேந்திர பிரசாத், பகவான் சஹானி ஆகியோர் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர். இதனால் சரத் யாதவ் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். பீகார் மாநிலத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில் ஐக்கிய ஜனதாதளத்தில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு கட்சி உடையும் அளவுக்கு போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் நிதிஷ்குமார், மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரவேற்கத்தக்கது என்று கருத்து தெரிவித்தார். ராஜ்யசபையில் அவரது ஆதரவு எம்.பி.க்கள் சிவானந்தா திவாரி, என்.கே.சிங், அலிஅன்மார், மகேந்திர பிரசாத், பகவான்சிங் ஆகிய 5 பேரும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.

மகளிர் மசோதாவை உள் ஒதுக்கீடு வழங்காமல் நிறைவேற்றி இருப்பது உயர் சமூக பெண்களுக்கு ஆதரவானது. தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிரானது. எனவே நிதிஷ்குமார் ஆதரவாளர்கள் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரித்தது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானது என்று சரத்யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
 
ஐக்கிய ஜனதாதளத்திற்கு ராஜ்யசபாவில் ஏழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஐந்து பேர் நேற்று மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். மீதமுள்ள இருவரில் ஒருவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். இவர் நடமாடக் கூட முடியாத நிலையில் உடல் நலம் குன்றி இருக்கிறார். இன்னொருவரான எஜாஸ் அலி மட்டுமே சரத் யாதவின் குரலாக கடந்த 2 நாட்களாக ராஜ்யசபாவில் நடந்த அமளி துமளியில் பிரதிபலித்தார். ராஜ்யசபா தலைவரால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 7 எம்.பிக்களில் இவரும் ஒருவர்.

இதன் மூலம் நிதீஷ் குமாரின் கையே தற்போது கட்சியில் ஓங்கியிருப்பது உறுதியாகி விட்டது. அதேசமயம், லோக்சபாவில் மொத்தம் 20 எம்.பிக்கள் இந்தக் கட்சிக்கு உண்டு. அவர்களில் 10க்கும் மேற்பட்டோ ர் நிதீஷின் ஆதரவாளர்கள் என்பதால் சரத்யாதவின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. எனவே லோக்சபாவில் மகளிர் மசோதா கொண்டு வரப்படப்படும்போது கட்சி அனேகமாக உடைந்து போய் விடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

சரத்யாதவ்- நிதிஷ்குமார் இடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி உடையும் என்று பீகார் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
 
நாடாளுமன்றத்தில் மகளிர் சட்ட மசோதா வரும்போது சரத்யாதவ் ஆதரவு எம்.பி.க்கள் அதை எதிர்த்து ஓட்டு போட முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பீகார் முதல்- மந்திரி நிதிஷ்குமார் தலைமை யில் தனிக்கட்சி உருவாகும் என்று கூறப்படுகிறது.

இதற்கான நடவடிக்கைகளில் நிதிஷ்குமார் இறங்கி விட்டார். கட்சித்தலைவர் சரத்யாதவ், முதலமைச்சர் நிதிஷ்-குமார் மோதல் உச்சச்கட்டத்தை அடைந்து விட்டது. அதற்கு நிரந்தர தீர்வு தனிக்கட்சிதான் என்று நிதிஷ்குமார் முடிவு செய்து விட்டதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள். இதுகுறித்து ஆதரவாளர்களுடன் நிதிஷ்குமார் ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. (டிஎன்எஸ்)

Home  |  About Us  |  Contact Us  |  Subscribe