மண்டபம், மார்ச்.9 (டிஎன்எஸ்) பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி வருகையையொட்டி, மன்னார் வளைகுடா கடல்பகுதியில் உள்ள தீவுகளில் கடலோர காவல்படையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னையில் புதிய சட்டமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்.,தலைவர் சோனியா வருகை தர உள்ளதை அடுத்து, பாதுகாப்பு ஏற்பாடாக மார்ச் 7 முதல்14 ம் தேதி வரை, உச்சிப்புளி முதல் ராமேஸ்வரம் முகுந்தராயர் சத்திரம் கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்துபணி மேற்கொள்கின்றனர்.
நேற்று இந்திய கடலோர காவல்படையின் மண்டபம் நிலைய கமாண்டிங் ஆபிசர் செய்னி, பிரதீப்குமார் எஸ்.பி., ஆகியோர் 'ஹோவர் கிராப்ட்' ரோந்து கப்பலில் மன்னார் வளைகுடா கடல்பகுதிகளில் உள்ள தீவுகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதற்காக, போலீசார் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
மண்டபம் அகதிகள் முகாமை கியூ பிரிவு போலீசார் கண்காணித்து வருகின்றனர். மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும் அகதிகள் மார்ச் 11,12,13 தேதிகளில் முகாமை விட்டு வெளியில் செல்ல தடை விதிக்கபட்டுள்ளது. (டிஎன்எஸ்)